குழலினிது யாழினிது யாழ் இனிது என்ப-தம் மக்கள்…. திருக்குறள் படித்த காலந்தொட்டே யாழ் என்னும் பண்டைய தமிழர் இசைக்கருவி குறித்த ஒரு ஆர்வம் உள்ளூர இருந்துகொண்டே இருந்தது. குழல் நிலைத்ததைப் போல் யாழ் நிலைத்து நீடிக்காமல் ஏன் அற்றொழிந்து போனது தமிழிசை மரபில் என்கிற ஒரு சிறு தேடலின் விளைவே இப்பதிவு. யாழ் மீட்டப்படுவதை எங்குமே இன்றுவரை பார்த்ததில்லை, கேட்டதில்லை. சங்ககாலத்துக்கு முன்பிருந்தே தமிழர் மரபில் யாழ் வாசிப்பவன் ஆண்,பெண் முறையே பாணன், பாடினி என்னும் காரணப்பெயர் அறிந்ததுண்டு. அண்மையில் தேடற்களஞ்சியமாம் கூகுளில் கிடைத்த ஒரு ஓவியம் வைத்து தேடிப்போக யாழ் என்னும் இசைக்கருவி பற்றிய சில தகவல்கள் கிட்டின. சரி, எனக்கு இசை பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் கிடைத்ததை பகிர்வதில் என்ன்வோ ஒரு திருப்தி.

யாழ்

 

யாழ் என்னும் இசைக்கருவி பற்றி,

“யாழ், தொல்காப்பியம் தோன்றுவதற்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யாழ் உருவாயிற்று.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹரப்பா நாகரிகத்தில் “யாழ்” காணப்படுகிறது.
21 நரம்புகள் கொண்டது பேரியாழ்.
17 நரம்புகள் கொண்டது மகரயாழ்
16 நரம்புகள் கொண்டது சகோடயாழ்
7 நரம்புகளைக் கொண்டது செங்கோட்டியாழ்.”

 
 
harps
 
“யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச்சிறப்பு வாய்ந்தது. யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, மிடற்றுக்கருவி என்று வகைப்படுத்துவர். இவற்றில் நரம்புக் கருவியாகிய யாழே, தமிழர்கள் வாசித்த முதல் இசைக்கருவியாகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது.”
 
 
இவ்வாறு பழந்தமிழ்ப் பண்பாட்டு இசைக்கருவி எப்படி மருவி வீணை ஆனது என்பதை சொல்கிறது இப்பதிவு. இவர் எழுத்தை அந்த தளத்திலிருந்து பிரதி எடுத்துப் பதிகிறேன், ஆட்சேபனை தெரிவிக்க மாட்டார் என்கிற நம்பிக்கையுடன். பண்ணோடு இசைமீட்டி பண்டைத்தமிழர் வாழ்வியலின் அங்கமான யாழ் பக்தி இலக்கியத்தில் எப்படி தெய்வீகத்தன்மை கற்பிக்கப்பட்டு வீணையாய் மருவியத்தை விளக்குகிறார் கட்டுரை ஆசிரியர்.
 
-–-தொடர்-34-e1415959586977
 
 
தமிழரின் மறைந்த இசைக்கருவி
 
“இசை இனிமை பயப்பது, கேட்பவரைத் தன் வயப்படுத்தும் இயல்புடையது. பண்டைத் தமிழகத்தில் வேட்டைச் சமூகத்திலேயே இசை தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது. இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது. இந்த நிலையில் யாழினை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியமான ஒன்று. எனவே, யாழின் தோற்றம், வடிவம் – வகை அதன் பரிணாமம் அது அழிந்ததற்கான சமூகப் பின்புலம் முதலியவற்றை காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.யாழின் தோற்றம்:வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையோ யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம்.
 
 
இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது. பதிற்றுப்பத்து, வில்யாழ் முல்லை நிலத்திலேயே முதலில் தோன்றியது என்று கூறினாலும், குறிஞ்சி நிலத்தில்தோன்றியது என்பதே பொருத்தமுடையது. ஏனெனில் குறிஞ்சி நிலத்தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடைபெற்றது. இந்த வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது.வடிவம் வகை:யாழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய சிற்பங்களோ, ஓவியங்களோ இன்று நம்மிடம் இல்லை. சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ன. என்றாலும் யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ் என்று அறிய முடிகிறதே ஒழிய அதன் வடிவினை அறிய முடியவில்லை. பெரும்பாணாற்றுப்படை (3-16 அடிகள்) ‘பூவை இரண்டாகப் பிளந்தது போன்ற உட்பக்கம், பாக்கு மரப்பாளையிலுள்ள கண்களைப் போன்ற துளை, இணைத்த வேறுபாடு தெரியாதபடி உருக்கி ஒன்றாய்ச் சேர்த்தது போன்ற போர்வை, நீர் வற்றிய சுனை உள் இருண்டிருப்பது போன்ற உட்பாகம், நாவில்லாத வாய்ப்பகுதி பிறைநிலவு போலப் பிளவுப்பட்ட பகுதி, வளைசோர்ந்த பெண்களின் முன்கையைப் போன்ற வார்க்கட்டு, நீலமணி போலும் நீண்ட தண்டு, பொன்னுருக்கிச் செய்தது போன்ற நரம்புகள் கொண்ட யாழ்’ என்று கூறுவதை வைத்து யாழின் தோற்றத்தை ஓரளவு மனக்கண்ணில் காண முடிகிறது.
 
 
 
img222
 
 
யாழின் வகைகள் என்று பார்க்கும் பொழுது வில்யாழ், பேரியாழ் (21 நரம்புகள்), சீறியாழ் (9 நரம்புகள்), என்பன சங்ககாலத்திலும், மகரயாழ் (17 (அ) 19 நரம்புகள்), சகோடயாழ் (14(அ) 16 நரம்புகள்), செங்கோட்டு யாழ் (7 நரம்புகள்) என்பன காப்பியக் காலங்களிலும் இருந்திருக்கின்றன. கல்லாடர் (கி.பி.9-ஆம் நூற்றாண்டு) தமது நூலில் நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், மருத்துவயாழ் (தேவயாழ்) முதலியவற்றைக் குறித்துள்ளார். சாத்தான் குளம் அ.இராகவன் தமது ‘இசையும் யாழும்’ என்னும் நூலின் யாழின் 24 வகைகளைக் குறித்துள்ளார்.யாழின் பரிணாமம்:வில்லின் அடியாகத் தோன்றிய வில்யாழ் முதலில் குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்றாலும் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நான்கு நிலங்களுக்கும் உரியதாக அமைந்தது. யாழினை இசைப்பதற்கென்றே ‘பாணர்’ என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டுள்ளார்.தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர். அதனாலேயே ஒரு நரம்பில் தொடங்கி மூன்று, ஐந்து, ஏழு….. என்று ஆயிரம் நரம்புகள் கொண்ட யாழ் உருவாகியது. தொடக்கத்தில் வடிவம் பற்றிய சிரத்தை இல்லையென்றாலும் சில காலங்களின் மகரம், செங்கோடு எனப் பல வகையான யாழ்கள் தோன்றின. இவ்வாறாக யாழ் கி.பி.9-ஆம் நூற்றாண்டுவரை பலவகையாக வளர்ந்தது. இதற்குப் பிறகு வடிவில் ஓரிரு வேறுபாடுகள் கொண்டு வீணையாக பரிணாமம் கொண்டது. அந்த வீணையே இசையுலகில் இன்றளவும் முதலிடம் வகிக்கிறது.யாழ் மறைந்ததற்கான சமூக பின்புலம்:யாழ் இசைக்கலைஞர்களான பாணர்கள் பெயரிலேயே இரண்டு சங்கநூல்கள் தோன்றியுள்ளதில் இருந்து யாழ் மற்றும் பாணர்களின் மதிப்பை அறியமுடிகிறது.
 
 
அந்நூல்கள், மன்னர்கள் பாணர்களைப் போற்றியும், புரந்தும் வந்தள்ளமையைக் காட்டுகின்றன. யாழ் பாடிக் கொண்டே இசைக்கும் கருவியாக இருந்துள்ளது. சாதாரண மக்களிடம் புழக்கத்தில் இருந்த யாழ் ஒரு காலக்கட்டத்தில் தெய்வத்தன்மை பெற்று வணக்கத்திற்கு உரியதாக மாறியது. சங்க இலக்கியம் மற்றும் முற்காலக் காப்பியங்களில் இசைக் கருவியாக யாழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால் பக்தியிலக்கிய காலத்தில் யாழும் அதன் பரிணாமமான வீணையும் ஒருங்கே காணப்பட்டன என்பதை ‘ஏழிசை யாழ், வீனை முரலக்கண்டேன்’ ‘பண்ணோடி யா‘ வீணை பயின்றாய் போற்றி’ என்ற மாணிக்க வாசகரின் பாடல்கள் பிரதிபலிக்கின்றன. ஆனால் கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீவக சிந்தாமணியின் ‘வீணை என்ற யாழையும் பாட்டையும் (730அடி)’ என்ற அடி யாழும், மிடறும் உடன்நிகழ்ந்த இசையே வீணை என்ற பொருள் தருகிறது. மேலும், ‘வெள்ளிமலை வேற்கண்ணாளைச் சீவகன் வீணை வென்றான் (730 அடி)’ என்ற அடிக்கு உரை எழுதிய ஆசிரியர், சீவகன் காந்தர்வ தத்தையை யாழும், பாட்டும் வென்றான் என்று குறித்துள்ளார்.எனவே, யாழே வீணை என்று குறிக்கப்பட்டு பிற்காலத்தில் தனி இசைக்கருவியாக வளர்ந்தது என்பதை அறிய முடிகிறது. மேலும், யாழ் என்ற இசைக்கருவி மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த காலகட்டத்தில் அதிலிருந்த வேறொரு இசைக் கருவியான வீணை தோன்றியதற்கான காரணம் ஆய்விற்கு உரியது. சங்க காலத்திலேயே ஆரியர்களின் ஆதிக்கம் தொடங்கியது.
 
 
ஆரியர்கள் தங்களுக்கான மொழியை, நூல்களை, தெய்வங்களை, பழக்கவழக்கங்களை, கலைகளை உருவாக்கிக் கொண்டனர். தமிழரின் பண்பாட்டினை உள்வாங்கி, அவற்றை தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டனர். அதற்குச் சரியான சான்று பரதநாட்டியம், கணிகையர் வீட்டில் வளர்ந்த பரதநாட்டியம், ஒரு காலகட்டத்தில் ஆரியர்களின் கலை ஆசிரியர்களுக்கே உரிய கலையாக மாற்றப்பட்டது. வீணையும் அவ்வாறு உருவாக்கப்பெற்றதே. தமிழரின் ஆதி கருவியாக யாழின் வடிவிலிருந்து வீணை என்ற ஒரு இசைக்கருவியை உருவாக்கித் தங்களுக்குரியதாக அமைத்துக் கொண்டனர். அதனைத் தென்னிந்தியா முழுவதும் பரப்பினர்.வீணையின் மீது தெய்வத்தன்மையை ஏற்றி அதனைத் தெய்வங்களுக்கு உரியதாக அமைத்தனர். வீணையை ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே வாசிக்கும் நிலையினை உருவாக்கினர். ஆரியர்களின் ஆதிக்கமும் விணையின் வளர்ச்சியும் தமிழர்களின் இசைக்கருவிகளின் முதன்மையான யாழினை முற்றிலுமாக அழித்துவிட்டன. இந்த நிலையில் நமது இசைக் கருவியான யாழினை இலக்கியங்கள் வாயிலாக மீட்டெடுப்பது அல்லது நினைவுபடுத்துவது தேவையான ஒன்று.” 
 
Posted by: AK 
im0714-04_harp
 
 
பழந்தமிழர் இசை என்று தேடலில் முதலில் கிட்டியது தமிழ் விக்கிபீடியா தகவற்களஞ்சியம் தான். தமிழர்களின் இசை பற்றிய நூல்கள் முச்சங்க காலத்துக்கு முன்னரே எழுதப்பட்டதாகவும்; அது மூவாயிரம் வருடங்களுக்கு மேற்பட்டது எனவும் இந்த இணைப்பில் சொல்லப்படுகிறது. இயல், இசை, நாடகம் என கலையம்சங்கள் பொருதியிருந்ததாகவே பண்டைத் தமிழர் வாழ்வியலும் இருந்திருக்கிறது. இசை பற்றிய சில பண்டைய நூல்கள் காலத்தால் அழிந்துபோனாலும், இன்றும் தமிழிசையின் தோற்றம், வளர்ச்சி, மருவிய வரலாறுக்கான சான்றுகள் கிடப்பதாய் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். மேற்கொண்டு படிக்க இணைப்பு கீழே. இந்த இன்ணைப்பில் கிட்டிய தமிழிசை சுரங்களும், பின்னர் அவை எப்படி வடமொழி வடிவம் கொண்டன என்பதும் மேலும் ஆவலைத் துண்டியது.
 
வ எண்  ஏழிசையின்      ஏழிசையின்                  பறவை/விளகுகளின் ஒலி 
              தமிழ்ப்பெயர்      வடமொழிப் பெயர் 
 
1            குரல்                    சட்சம்                            மயிலின் ஒலி
2            துத்தம்                 ரிஷபம்                          மாட்டின் ஒலி
3            கைக்கிளை        காந்தாரம்                     ஆட்டின் ஒலி
4            உழை                  மத்திமம்                       கிரவுஞ்சப்பறவையின்  ஒலி
5            இளி                     பஞ்சமம்                        பஞ்சமம்
6            விளரி                 தைவதம்                       குதிரையின் ஒலி
7            தாரம்                  நிஷாதம்                        யானையின் ஒலி
 
 
இச்சுரங்கள் பன்னிரண்டாக விரிவடைகின்றன. அவை
 
  1. குரல் – சட்சம் (ஷட்ஜம்)- ச
  2. மென்துத்தம்- சுத்தரிஷபம் ரிஷபம்,- ரி1
  3. வன்துத்தம்- சதுஸ்ருதி ரிஷபம்- ரி2
  4. மென்கைக்கிளை- சாதாரண காந்தாரம்- க1
  5. வன்கைக்கிளை – அந்தர காந்தாரம் – க2
  6. மெல்- உழை சுத்த மத்திமம்- ம1
  7. வல்- உழை பிரதி மத்திமம் – ம2
  8. இளி-பஞ்சமம்- ப
  9. மென் விளரி- சுத்த தைவதம்- த1
  10. வன் விளரி- சதுஸ்ருதி தைவதம்- த2
  11. மென்தாரம் -கைசகி நிஷாதம்- நி1
  12. வன்தாரம் – காகலி நிஷாதம் – நி2

மூலம்

 
சுவாமி விபுலானந்தரின் ‘யாழ் நூல்’ விமர்சனமாக அமைந்த இக்கட்டுரை மிக மேலோட்டமாக யாழ் இன் வரலாற்றுப்படிமம் பற்றிய ஆதாரங்களை விட்டுச்செல்கிறது.
 
 
“சங்க இலக்கியங்களையும் சிலப்பதிகா ரத்தையும் தேவாரங்களையும் ஆதாரமாகக் கொண்டு தமிழரின் இசைப் பாரம் பரியத்தைத் தொடர்ச்சியாக இனங்காண முயலுகிறார் அடிகளார். பாயிரவியல், தேவராவியல், ஒழிபியல், சேர்க்கை என்ற பகுதிகளாக இந்நூல் வகுக்கப்பட்டுள்ளது. பாயிரவியலில் தன் நோக்கம் கூறிய அடிகளார் யாழுறுப்பியலில் பண்டைத் தமிழ் இலக்கியங்களை ஆதாரமாகவும் தாம் கற்ற மேற்கு நாட்டு வரலாறுகளை துணையாகவும் கொண்டு பண்டைத் தமிழர் மத்தியில் வழக்கிலிருந்த யாழ்களை மீளுருவாக்கம் செய்யும் முயற்சியிலீடு படுகிறார். வில்யாழ், பேரியாழ், மகரயாழ், சீறியாழ் எனப்படும் செங்கோட்டு யாழ், சகோடயாழ் ஆகிய யாழ் வகைகளை வெளிக் கொணர்கிறார். பெளதீகவியலுக்கு ஏற்ப யாழின் நரம்பின் அமைப் புக்கள் கூறப்பட்டு ஒலிகள் அளக் கப்படுகின்றன. இசை நரம்புகளின் சிற்றெல்லை, பேரெல்லை என்பன கூறப்படுகின்றன.
 
 
பாலைத்திரிபியலில் பாலையின் வகைகள் செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப் பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை என வகுக்கப்பட்டு சகோடயாழுக்கு இசை கூட்டும் முறையும் கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதையில் யாழா சிரியனது அமைதி கூறிய செய்யுட் பாகத்துக்கு உரை கூறும் முகத்தான் பண்டைய யாழ் பற்றித் தன் கருத்துரைக்கிறார் அடிகளார்.
 
 
இறுதியாக, சேர்க்கையில் தேவார இசைத்திரட்டும் இசை நாடகச் சூத்திரங்கள் சிலவும் சேர்க்கப்பட் டுள்ளன. முடிவுரையில் யாழ் நூலின் நோக்கம் கூறப்படுகிறது. சிலப்பதிகார அரங்கேற்று காதையில் யாழ் ஆசிரியன் அமைதி கூறும் இருபத் தைந்து அடிகளுக்கு இயைந்த ஒரு விரிவுரை இந்நூல் என்று கூறுகிறார் அடிகளார்.
 
 
01. பண்டைத் தமிழர் இசைக் கருவிகளையும் இசையையும் வெளிக்கொணர்வதும்,
02. தமிழிசை வரலாற்றை விளக்குவதும்,
03. இசை ஆராய்ச்சிக்கு இன்றிய மையாத கணக்கு முறை களைக் கணித மூலம் விளக்குவதும்,
இந்நூலின் நோக்கங்கள் என நாம் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.”
 
 
 
 
இப்படி யாழ் என்னும் இசைக்கருவி மூலம் தமிழர் மரபிசை குறித்து அறியும் முயற்சிக்கான தேடலில் கிடைத்தது பிரித்தானியாவிலிருந்து பிபிசி செய்தி நிறுவனம் உருவாக்கிய யாழ், Harp எனப்படும் இசைக்கருவியின் ஆவணப்பதிவு. அதில் Harp எனப்படும் யாழின் ஆரம்பம், அது பரவி, விரவியிருக்கும் திசை, இசை நுணுக்கம் வரை பேசும் பிபிசி ஆவணம் ஐரோப்பாவை மையமாக வைத்து சர்வதேச விருதுபெற்ற Harpist, Cartin Finch பிரித்தானிய “Royal Harpist to the Prince of Wales 2000 – 2004” ஐக் கொண்டு ஒர் சர்வதேச ஆவணப்படம் தயாரித்திருக்கிறது. எத்தியோப்பாவில் ஹார்ப் இன் ஆதி அந்தத்தைத் தேடிப்போய் ஐரோப்பாவில் நிறுத்தியிருக்கிறார்கள். இத்தாலியில் Harp உற்பத்தியில் தொடங்கி தெற்கு அமெரிக்காவில் வெனிசுவேலா, பிறகு ஸ்பெயின், ஃப்ரான்ஸ் என்று பயணிக்கிறது தொகுப்பு. ஒவ்வொரு இனமும், மக்களும் அவர்களிடையே தனித்திறமையோடு வளர்ந்து நிற்கும் Harpists கள் அவரவர் திறைமையை இசைவழி ரசிக்கவைக்கிறார்கள் காணொளியில்.
 
 
தமிழர்களின் யாழ் இந்த Harp வகையைச் சேர்ந்தது தானே என்று அவாவில் கடைசிவரை பொறுத்திருந்து முழுதும் பார்த்து முடித்ததில் தமிழ் யாழ் பற்றி எந்தக் குறிப்பும் கானொளியில் இல்லை என்பது ஏமாற்றமே. என்ன காரணமாக இருக்கக்கூடும் என்று யோசித்ததில் எல்லா நாடுகளிலும் அந்த இசைக்கருவியின் பாரம்பரியம் இன்றும் புழக்கத்தில் இருந்தபடியே காலத்துக்கும், இசைக்கும் ஏற்றாற்போல் பரிணாமம் கொடுத்தபடி  வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. பண்டையத்தமிழர்களின் யாழ் ஆரியர்களால் வீணைவடிவம் கொடுக்கப்பட்டு திரிபடைந்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் தமிழர் சமூகத்தில் வீணையும், கர்நாடக சங்கீதமும் தெய்வீகமாகி வேறு தளத்தில் ஆளப்படுகிறது. தொன்மநூல்களின் வழி நரம்புக்கருவியான யாழ் போன்ற இசைக்கருவிகளைப் பற்றிப் பேசும் தமிழ் மரபு அதற்கான சிற்பங்கள், ஓவியங்கள், இன்னபிற சான்றுகளை வடிக்காமல் எப்படி கோயிற் சிற்பங்களில் கூட வெறெதையெல்லாமொ வடிவமைத்து வைத்திருக்கிறார்கள் தமிழ் மன்னர்கள்! கைவிடப்பட்ட, கவனிக்காமல் புறக்கணிக்கப்பட்ட தமிழர் பாரம்பரியங்கள் இன்னும் எத்தனையோ என்கிற கேள்விகள் தொக்கி நிற்கிறது.
 
 
இதுபோன்ற எண்ணங்கள் உந்தித்தள்ள காணொளியில் இருக்கும் கருத்துக்களைப் படிக்கத் தலைப்பட்டு அங்கேயும் ஒரு தமிழர் என்று நினைக்கிறேன், தனது ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தது கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது. அவர் குறிப்பிட்டது, பிபிசி ஆசியாவில் தமிழர்களின் யாழ் என்கிற தொன்மைவாய்ந்த இசைக்கருவி பற்றிக்  குறிப்பிடவில்லை. இந்த ஆவணப்படம் முழுமையான ஒன்றாக இல்லை என்கிறார். அவர் கருத்து முழுமையாக இதோ,
 
 
/Believeitornaught Apr 9, 2014
 
“This documentary is incomplete and to a great extent misleading without covering the Asian harp history. As many informed global historians would know harp is also a Tamil music instrument called Yaazh that dates back to 2000 plus years with literary evidences and archeological evidences. In fact there were variety of harps called Bary Yaazh, Magara Yaazh, Sengottu Yaazh etc. played with different number of strings and at various occasions. One of the earliest aboriginal Tamil places in Sri Lanka is called Yaazhpanam (misspelt by Britishers as Jaffna) in the name of harp. Also, harpists are called Paanan and his lady would be called Paadini. Never thought BBC would just cover european history alone and mislead the public by ignoring Tamil history of Harp, which comparably or rather more historic than Irish or Welsh or Celtic harp histories.”
Comment Courtesy: Believeitornaught.
 
 
இவர் கருத்தைப் படித்த பிறகு ‘யாழ்ப்பாணம்’ என்ற ஈழத்தின் வடக்கில் ஒரு பகுதிக்கும் யாழ் இசைக்கருவிக்கும் என்ன தொடர்பு இருக்ககூடும் என்று மீண்டும் ஒரு கேள்வி மனதில் தோன்றியது. கட்டற்ற தேடற்களஞ்சியம் கூகுள் கொடுத்த இந்த இணைப்பு இப்படி சொல்கிறது.
 
 
“யாழ்ப்பாணம் என்ற பெயர் எவ்வாறு வந்தது என்பதை நாம் ஆராய்ந்தால் யாழ் இசைக்கருவிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை உணரமுடியும். சோழநாட்டிலிருந்து வந்த பாணன் ஒருவன் ஜெயதுங்கராசன் முன்னிலையில் யாழை வாசித்து மகிழ்வித்தமையால் மணற்றியின் காலப்போக்கில் குடாநாடு முழுவதுக்கும் அப்பெயர் வழங்கப்பட்டது.”
 
 
 
 
ஈழத்தமிழர் தொன்மை
 
யாழ்ப்பாணம் என்ற காரணப்பெயருக்கு பல செவிவழிக்கதைகளும் உண்டு என்கிறார்கள். எதுவாயினும் ‘யாழ்’ க்கும் யாழ்ப்பாணத்துக்கும் இருக்கும் தொடர்பை யாரும் நான் தேடியவரையில் மறுக்கவில்லை.
 
தேடித்தேடி தொலைந்து ஒருவாறு முக்கியமான பகுதிகளை மட்டும் அல்லது எனக்கு முக்கியம் என்று தோன்றியவைகளை மட்டும் இங்கே யாழ் பற்றி, அதுக்கும் தமிழர்களும் இடையேயான தொன்மக்கூறுகள் பற்றியும் கண்டெடுத்துக் கொடுத்திருக்கிறேன். மறுபடியும், நான் வரலாறு படித்தவர் கிடையாது. அழிந்துபோன, அழிந்துகொண்டிருக்கும், அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர் வரலாறு குறித்த ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த எறும்பின் முயற்சி. என்னை இப்பதிவெழுதத் தூண்டிய ஓவியம்.
 
im0714-02_harp
 
 
Image & Source Courtesy: Google.
WP Radio
WP Radio
OFFLINE LIVE